மானுடமே ஒரு நல்ல அனுபவம். அப்படியான தனது வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்பதும் ஒரு மகிழ்வுதான். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படியாக அதை எழுதுவதும் ஒரு சிறப்பு. அதைச் சான்றோர் சிலர் படித்துப் பாராட்டுவது மகிழ்வின் உச்சம். அந்தச் சான்றோர்கள் நமது வாழ்வில் ஏதாவது ஒருவகையில் சம்பத்தப்பட்டவர்களாக இருப்பது மகிழ்வின் உச்சத்திலும் ஒரு நிறைவு. அந்த நிகழ்வு எனக்கு எனது வாழ்வின் மத்தியில் நடப்பது ஏதோ செய்திருக்கிறோம் என்பதை விட, இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று தூண்டுகிறது. அந்த வகையில் "கையருகேநிலா" எனது அனுபவம் மற்றும் ஆசைகளின் கோர்வை.
இந்திய விண்வெளி ஆய்வுகளின் பிதாமகர், இன்றைய இந்திய இளைஞர்களின் கனவு நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் அணிந்துரை “கையருகே நிலாவிற்கு ஒரு மணிமகுடம். அணிந்துரையின் ஒவ்வொரு வரிகளும் நானும் எனது குடும்பமும் போற்றிக் காக்கும் ஒரு பொக்கிசமாகிவிட்டன..
என்னுடைய இன்றைய நிலைக்குக் காரணம் அறிவியல் சரித்திரத்தில் தடம் பதித்த சந்திரயான்-1. அதன் திட்ட இயக்குனராக நான் பணியேற்கக் காரணம் எனது கல்வி. எனது உயர்கல்விக்கு வித்திட்டது பொள்ளாச்சி நல்ல முத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி. அதன் நிறுவனர் அருட்செல்வர் மகாலிங்கம். அங்கு எனக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் சிற்பி. பாலசுப்பிரமணியன். என்னை ஆரம்பித்திலேயே அடையாளம் கண்டு ஆசிர்வதித்த அவர்கள் இருவரின் அணிந்துரை இந்தப் புத்தகத்தின் அடிநாதத்துடன் இயல்பாக இணைந்துள்ளது.
எனது வாழ்வியல் அனுபவத்துடன் எனது தமிழும் என்னுடன் கைகோர்த்து இயல்பாய் நடந்திருப்பது “கையருகே நிலா”விற்கு உடலும் உயிருமாய் அமைந்ததாக உணர்கிறேன். தாய்த் தமிழுடன் நான் நடை பயிலக் காரணமானவர்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவரே அதை உணர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. “கையருகே நிலாவில்” அதை நான் சில இடங்களில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். அவரின் அணிந்துரை எனது தமிழுக்கு ஓர் ஊக்கம்.
நடப்பது எல்லாம் நல்லதற்கே என்று நம்புபவன் நான். சிற்பி அய்யாவின் மூலம் எனக்கு திரு.முஸ்தாபா அறிமுகமானதும் ஒரு ஆரோக்கியமான அனுபவமே. அந்த அறிமுகமே படிப்படியாக வளர்ந்து அவரது பதிப்பகத்தை நான் திறந்து வைக்கவும், அவர் எனது புத்தகத்திற்குப் பதிப்பாளராகவும் இணைத்துள்ளது. புத்தக உலகில் நல்ல ஆரம்பத்தை எங்கள் இருவருக்குமே கொடுத்துள்ளது. அந்த வகையில் "கையருகே நிலா"வும் எனது அடுத்த கட்ட முயற்சிகளுக்கு ஒரு நல்ல அடிக்கல்லாக இருக்கும் என நம்புகிறேன்.
எனது பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், அறிவியல் தொழில் நுட்பக் குழு, நண்பர்கள் என்று என்னை ஆக்கி அழகு பார்க்கும் அனைவருக்கும் நன்றிகளாய், எனது ஆரம்ப காலக் கல்வி, விண்வெளி ஆய்வு, தமிழ், வாழ்வியல் அனுபவங்கள் எனப் பலதும் சேர்த்து, “கையருகே நிலா” என்ற இந்தப் புத்தகமாய் உங்கள் கைகளில் நான்.
இவண்
மயில்சாமி அண்ணாதுரை
No comments:
Post a Comment